கவிதை ஜீவிதம்

     ஸ்ரீசெண்பகா பதிப்பகத்தின் வெளியீடாகக் கவிஞர் பரிணாமனின் ‘பரிணாமன் கவிதைகள்’ என்ற தொகுதி வெளிவந்து ஏறத்தாழப் பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த பத்து ஆண்டுகளில் உள்நாட்டிலும் உலகத்திலும் எத்தனையோ மாற்றங்கள் நடந்துவிட்டன.

     “கம்யூனிஸக் கப்பல் கரை சேர்க்காது. சோஷலிஸம் ஜெயிக்காது; முதலாளித்துவம் ஒன்றே முக்திக்கான மார்க்கம்” என்று எக்காளம் ஊதியவர்களின் எச்சில் உலரும் முன்பே ஏகப்பட்ட அமெரிக்க வங்கிகள் திவாலா என்ற திகில் நாடகம் அரங்கேறியதும், அதன் தொடர்காட்சிகளாய் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார அடித்தளங்கள் ஆட்டம் கண்டதும் இந்தப் பத்தாண்டுகளில்தான்.

     நேரு, இந்திரா பாதையை விட்டு முற்றிலும் விலகாத காரணத்தால் இந்தியப் பொருளாதாரம் முழுகாமல் தப்பியது. ஆனாலும் அமெரிக்க மோகப் பேயின் ஆட்டுவிப்பிலிருந்து இந்திய ஆட்சியாளர்கள் விடுபட்டதாய்த் தெரியவில்லை. ஆதிக்க சக்திகளும் அவர்கள் தோதுக்கு தத்துவம் திரிக்கும் அறிவு ஜீவிகளும் இன்னும் சந்தைப் பொருளாதாரச் சாம வேதம் பாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்

     கல்வி சந்தைப் பொருளாகிவிட்டது; மருத்துவம் சந்தைச் சரக்காகிவிட்டது; ‘சும்மா விளையாட்டுக்கு’ என்றெல்லாம் சொல்ல முடியாத அளவுக்கு விளையாட்டுத் துறைகளில் பணம் புகுந்து விளையாடுகிறது; இதுவரை உலகம் கண்ட ஆட்சித் தத்துவங்களில் சிறந்ததாக விளங்கும் ஜனநாயகம் வழங்கிய வாக்குரிமைகூட பணத்தால் வாங்கப்படுகிறது. அதிகப் பணம் கொடுத்த கட்சி,  கொஞ்சம் பணம் கொடுத்த கட்சி என்று அரசியலும் சந்தைமயமாகி, சந்தைவயமாகிப் போன அவலத்தை, அசிங்கத்தைக் காண நேர்ந்ததும் இந்தப் பத்தாண்டுகளில்தான்.

     மானுட மாண்புகளும் மனித உயிர்களும் மலிவுப் பொருள்களாகிவிட்டன. எல்லா மதிப்புகளையும் லாப நட்டத் தராசில் ஏற்றிப் பார்க்கும் இவர்கள் இயற்கையையும் விட்டு வைப்பதில்லை.

     மானுட அக்கறையும் இயற்கை நேசமும் கொண்ட கவிஞனிடம் இந்தச் சூழல் கோபத்தையும் தேடலையும் ஏற்படுத்துகிறது. ஏற்கனவே ஒரு தேடல் நிகழ்த்தி மார்க்சிஸத்தை மானுடத்தின் விடியலுக்கான மார்க்கம் என்று ஏற்றுக்கொண்டவர் கவிஞர் பரிணாமன். சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னர் அந்தத் தத்துவத்திற்கு அண்டக்கொடுத்து வேறு சித்தாந்தங்களைத் தேடியவர்கள் உண்டு; அதையே வேண்டாம் என்று தூக்கி விளாசிவிட்டு ஓடியவர்களும் உண்டு.

     ஆனால், மார்க்சியத்தின்பால் பரிணாமன் கொண்டிருக்கும் நம்பிக்கை இன்னும் வலுப்பெற்றுத் திகழ்கிறது என்பதற்குச் சான்றாக இத்தொகுதி விளங்குகிறது. அவர் மகாகவி பாரதி வழியில் வந்த லெனினையும் மார்க்ஸையும் அடைந்ததுதான் அதற்குக் காரணம். கூடுதலாக, அவர் கவிதைகளில் ஒரு வித ஆன்மிகச் சாயல் தென்படுவதற்கான காரணமும் அதுதான்.

      ஆன்மிகம் என்பதற்கும் மதத்திற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ஆன்மிகத்திற்கும மறுமைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ஒரு தனி மனிதனின் ஆன்மிக அனுபவம் அவனது சமூக வாழ்வில் பிரதிபலிக்கவில்லையென்றால் அந்த அனுபவத்தால் அவனுக்கும் எவருக்கும்  ஒரு புண்ணியமுமில்லை. அரண்மனையை விட்டு காட்டிற்கு ஏகி ஞானம் பெற்று மக்களிடம் திரும்பி வந்ததால் அல்லவோ கௌதமன் சரித்திரப் புருஷன்?

    மானுடத்தின் மேன்மைக்கு, மானுடத்தின் மீட்சிக்கு வழிகளை சிந்தித்தார்கள்; தேடினார்கள் என்பதால் அல்லவோ வேத ரிஷிகள் தொடங்கி விவேகானந்தர்வரை – அவர்கள் காட்டிய வழிகள் குறித்து விமர்சனங்கள் இருந்த போதும் அவர்களை மக்கள் வணங்குகின்றனர். இந்த இடத்தில் “புத்தனை காந்தியை பூரணப்படுத்துவோம்” என்ற பரிணாமனின் கவிதை வரிகள் நினைவில் பளிச்சிடுகின்றன.

     இந்தியச் சிந்தனை மரபை உள்வாங்கி அதனைப் புதுப்பிக்க முயலும் உள்ளடக்கமும் தமிழ்க்கவிதை மரபை உள்வாங்கி அதனை அழகுற வெளிப்படுத்திய ஆக்கத் திறனும் இத்தொகுப்பிற்கு பெரும் வரவேற்பைப் பெற்றுத்தரும்.

     இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள பல பாடல்கள் அவரால் மெட்டமைக்கப்பட்டு பல மேடைகளில் பாடப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்களிடம் சிந்தனைக் கிளர்ச்சியையும் உள்ளக் கிளர்ச்சியையும் ஏற்படுத்திய சிறப்பைப் பெற்றவை.

    தான் இயற்றிய பாடல்களுக்கு அதன் உயிர்த்தன்மை ஒலிக்கும் வண்ணம் மெட்டிட்டுப் பாடும் திறனுடையவர் என்பதால் இவர் பாரதி, ஜீவா, கேசிஎஸ். அருணாச்சலம் என்ற வரிசையில் வைத்துக் கருதத் தக்கவராகிறார்.

    இசைப் பாடல் வடிவம் என்பது மகத்தான ஆற்றல் உடையது. பெருவாரியான மக்களை ஈர்க்கும் தன்மை உடையது என்பதனை இவர் நிரூபித்து வருகிறார். தன் பாட்டுத் திறத்தால் இவர் அரங்கத்தையே தன் கட்டுக்குள் கொண்டு வந்து விடும் அந்த மாயாஜாலத்தைப் பார்க்கும் போதெல்லாம் மகாகவி பாரதியாரின் ‘கண்ணன் பாட்டு’ இரண்டாம் பதிப்புக்கு வழங்கிய முன்னுரையில் வ.வே.சு ஐயர்  “...கற்பனா கர்வத்தோடும் சிருஷ்டி உற்சாகத்தோடும் ஆசிரியன் தன்னுடைய கம்பீரமான குரலிப் பாடியதைக் கேட்ட ஒவ்வொருவரும் இந்நூலில் உள்ள பாட்டுகளை மாணிக்கங்களாக மதிப்பர்” என்று எழுதியதுடன், அவ்வை சண்முகம், “ஒரு நாள் ‘மயில் ராவணன்’ நாடகம் நடந்து கொண்டிருந்தது. அந்நாடகத்தில் நான் ராமராக நடித்தேன். சபையில் இருந்து ‘ஏழைத்தொழிலாளர் வாழ்வு’ என்ற குரல் எழுந்தது. மற்றும் சில குரல்கள் ‘காலுக்குச் செருப்புமில்லை’ என்று கூவின. சத்தம் அதிகரித்ததால் நான் மேடைக்கு வந்தேன். “இந்த வேடத்தில் நின்று கொண்டு அந்தப் பாடல்களைப் பாட என் மனம் இடம் தரவில்லை.அப்படிப் பாடினாலும் பாடுவதில் உணர்ச்சி இராது. நீங்கள் அமைதியாக இருந்தால் நான் இறுதியில் வந்து பாடுகிறேன்”

என்றேன். மக்கள் என் பேச்சை கைதட்டி வரவேற்றார்கள். நாடகம் முடிந்த பிறகு நான் அவ்விரு பாடல்களையும் பாடினேன். அதுவரை சபையோர் அமைதியாக இருந்து கேட்டு விட்டு கலைந்து சென்றனர் என்று ஜீவாவின் பாடல்களுக்கு இருந்த செல்வாக்கு குறித்து எழுதியதும் நினைவில் எழும்.

    இச்சிறப்புக் கொண்டு தற்காலத்தில் விளங்கும் கவிஞர் இவர் ஒருவராய்த்தான் இருப்பார் என்று தோன்றுகிறது. ‘மானுட அழகியலே மார்க்ஸிய அழகியல்’ என்றுரைத்த ஜீவா உருவாக்கிய கலை இலக்கியப் பெரு மன்றத்தின் விளைச்சல் என்று தன்னை பெருமையோடு கூறிக்கொள்ளும் அவரது இந்தக் கவிதைத் தொகுதி பெரு மன்றத்தின் பொன் விழா ஆண்டில் வெளி வருகிறது.

     இத் தொகுதியை உருவாக்கிய கவிஞர் பரிணாமனும் இதனை வெளியிட்ட பதிப்பக்தாரும் இந்நூலை வாங்கிப் படிக்கும் கவிதை நேயர்களும் போற்றுதற்குரியவர்கள்.

நன்றி.        தோழமையுடன்

சந்திரகாந்தன்
சிங்கம்புணரி
1.1.2013