என்னைக் குறித்துச் சில!    

எனது இயற்பெயர் எம். கிருஷ்ணன். நாற்பைந்தாண்டுகளாகப் பரிணாமன் என்ற புனைப்பெயரால் முற்போக்கு இலக்கிய இயக்கத்தால் அறியப்பட்டு வருகிறேன். 30.12.1946ல் மதுரை காரியாபட்டி அருகில் உள்ள இலுப்பகுளம் என்ற கிராமத்தில் பிறந்த நான், ஐந்தாறு வயதில் குடும்பத்தோடு மதுரைக்கு வந்திருக்கிறேன்.

     ஐந்தாம் வகுப்போடு எனது பள்ளிக் கல்வி நின்று போனது. சித்தாள் வேலை தொடங்கி கட்டிடக் கொத்தனார் ஆகி விட்டேன்.

‘’    பெற்றொர்க்குப் பணியாமல் ஊரை சுற்றி
பிழைபலவும் செய்தவன்நான் உண்மை சொல்வேன்!

நற்றாயும் பள்ளியிலே கொண்டு விட்டாள்
நான்கைந்து ஆண்டிருக்கப் பொறுமையில்லை!

சுற்றத்தார் யாவருமே கருதவில்லை!
சுதந்திரமாய்த் தெருக்களையே கற்றுத் தேர்ந்து

கற்றோர்கள் முன்வந்தேன் கவிதையாகி
கல்லாத எனைநன்கு கற்றுக்கொள்வீர்! ‘’

                                               என்று ஒரு கவி கூட அப்போது பாடியிருக்கிறேன்.

     பொதுவாக சாமர்த்தியத்திலிருந்து சத்தியத்துக்கு நான் மாறிய காலகட்டம் அது. 1962ல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநாடு, மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. அதை ஒட்டிய பொது நிகழ்ச்சிகள் வைகைக் கரையின் வடக்கிலும் தெற்கிலும் நடைபெற்றன. அப்படி ஒரு நிகழ்ச்சி செல்லூர் களத்துப் பொட்டலில் நடைபெற்றது. அதில் தொ.மு.சி. ரகுநாதன் பாரதியார் பற்றி பேசியதைக் கேட்ட எனக்கு; எனது இலக்கியப் பாதையை தேர்ந்தெடுக்க நல்லதோர் வாய்ப்பாக அமைந்தது. அதை ஓர் திருப்புமுனை எனலாம்.

     பள்ளிப்படிப்பை விட்டுவிட்டது என் மனதில் உறுத்தலாகவே இருந்தது. எனவே படிக்கும் மாணவர்களிடமும் இளைஞர்களிடமும் பழகிப் பழகி நான் படிக்க முற்பட்டேன். வேலைக்குப் போகிறேன் என்று பொய் சொல்லிவிட்டு நூலகங்களுக்குப் போய் வருவது எனக்கு வழக்கமாகிவிட்டது. கிடைத்த பணத்தில் எல்லாம் நூல்களை வாங்கி வீட்டில் திட்டும் உதையும் வாங்குவது வாடிக்கையாகிவிட்டது.

     இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் பிளவுக்குப் பிறகு நான் ‘ஜனசக்தி’, ‘தாமரை’ படிக்க ஆரம்பித்தேன். மதுரை மேலக்கோபுர வாசலில் அமைந்திருக்கும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் என் போன்ற இலக்கிய தாகம் கொண்டோருக்கு வேடந்தாங்கலாக ஆகியது. அங்கே தோழர் உலகநாயகம், தோழர் நவபாரதி, வேல்முருகன், தோழர் ஆர்.எஸ். சண்முகம்   ( இப்போது இவர் ஸ்ரீ செண்பகா பதிப்பக உரிமையாளர்) டாக்டர் தி.சு. நடராஜன், டாக்டர் கேசவலு, மற்றும் அவர் சகோதரர் எஸ். துரைராஜ், கவிஞர் பொன்மணி, எழுத்தாளர் சந்திரகாந்தன் போன்றோர் சந்திப்பும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா போன்ற இயக்கத் தலைவர்களின் சந்திப்பும் நிகழ்ந்தது.

     மதுரை செல்லூரில் அருமை எழுத்தாளர் திரு ப.கர்ணன் அவர்களது நட்பு எனக்கு பெரும் பலன் அளித்தது என்பதை இப்போது நான் நன்றியோடு ஒப்புக் கொள்ள வேண்டும். அவர் மூலமாகத்தான் நோபல் பரிசு பெற்ற தமிழ் மொழி பெயர்ப்பு நாவல்களை படிக்க முடிந்தது. மேலும் சி.சு. செல்லப்பா, லா.சா.ராமாமிர்தம், ஜி.நாகராஜன், போன்ற இலக்கிய ஆளுமைகளை கர்ணனின் தையற்கடையில் வைத்து சந்தித்திருக்கிறேன்.

     பிரமச்சாரியாகவே வாழ்த்து எழுதிச் சாதனைப் படைத்து மறைந்த மேலக்கோணம்பட்டி ஆ.சந்திரபோஸ் அப்போது மதுரை தானப்பமுதலி தெருவில் தங்கியிருந்தார். சந்திரபோஸ்  தங்கியிருந்த விடுதி ஓர் கால் நூற்றாண்டு காலம் எங்களுக்கெல்லாம் சங்கம விடுதியாய் திகழ்ந்தது மறக்க முடியாத காலம்.

   1970-80 களில் கலை இலக்கியப் பெருமன்ற இயக்கத்தின் மூலம் நூற்றுக் கணக்கான படைப்பாளிகள் உருவாகினர். ‘தாமரை’ மாத இதழுக்கு அப்போது பொறுப்பாசிரியராக இருந்த தோழர் தி.க.சிவசங்கரன் என் வயது படைப்பாளிகள் பலரை ஊக்குவித்து உருவாக்கினார். தோழர் பொன்னீலன், தனுஷ்கோடி ராமசாமி, எழுத்தாளர் ஜெயந்தன், பா. செயப்பிரகாசம், ராஜபாளையத்தைச் சேர்ந்த கொ.மா. கோதண்டம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

     மொத்தத்தில் அக்கால திராவிட இயக்க அரசியல் சூழலை தவிர்த்து நான் தேசிய இயக்கச் சூழலில் சேர்ந்து விட்டது. இப்போது நினைத்தாலும் எனக்கு பெருமையாக இருக்கிறது.

     நான் பிறந்து வளர்ந்த வட்டாரத்தில் திருச்சுழியில் ரமண மகரிஷியும், மகாகவி பாரதியும், பிறந்துள்ளனர். பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவரும், பெருந்தலைவர் காமராஜரும் பிறந்த பகுதியாகும்.

     1974 டிசம்பரில் எனது முதல் கவிதைத்தொகுப்பு வெளிவந்தது. ‘’ஆகஸ்டும்-அக்டோபரும்’’ என்று அத்தொகுப்பிற்குப் பெயர். ‘ஆகஸ்டு’ இந்திய சுதந்திரம் பற்றியும் ‘அக்டோபர்’ ருஷ்ய புரட்சி பற்றியுமாக அமைந்த தலைப்பு அது.

     ‘’ தோழர்களே! போராட்ட வீரர்களே’’ என்று ஆரம்பித்து தேசத்திற்கு நாம் கிடைத்துவிட்டோம். ஆனால் இன்னும்  தேசம் நமக்குக் கிடைக்கவில்லை என்று அந்நூலின் பின்னட்டையில் எழுதியிருக்கிறேன். ஆனால் இப்போது தேசம் நமக்குக் கிடைத்துவிட்டது என்ற மனோநிலையில் பெருமிதம் கொள்கிறேன்.

    ‘’ பரிமாணமன் கவிதைகள்’’ ஆகஸ்டு வாணம் அல்ல; அக்டோபர் துருவதாரகை; பரிணாமன் பாரதியின் மகன், மாய கோவுஸ்கியின் மருமகன்’ என்று அந்நூலில் என்னைப் பாராட்டி கவிஞர் மீரா எழுதியிருக்கிறார்.

    பாரதியின் மகன் சரி; மாய கோவுஸ்கியின் மருமகன் சரி; இந்தியாவின் ஆகஸடு சுதந்திரப் புரட்சி மத்தாப்பு வாணம்தான் என்று அவர் குறிப்பிட்டுள்ளதை என்னால் ஏற்க முடியவில்லை. அக்டோபர் துருவதாரகை சிதைந்துவிட்ட யதார்த்தத்தை அவர் இன்றிருந்திருந்தால் ஒப்புக்கொள்வார் என்று நம்புகிறேன்.

     ‘’வாழ்க நீ எம்மான்’’ என்ற பாரதியின் வழியில் – மகாத்மா காந்தி அவதரித்த அக்டோபர் இரண்டிலேயே, இங்கே ஓர் அக்டோபர் புரட்சி நடந்திருக்கிறது என்று நான் புரிந்து கொண்டு பாடுபவனாக இன்று வளர்ந்திருக்கிறேன்.

     சினிமா பாடல்களின் தாக்கத்தையும் மீறி நான் பாடிய எத்தனையோ பாடல்கள் நாற்பது வருடங்களாக கலை இலக்கியப் பெருமன்ற மேடைகளிலும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க  மேடைகளிலும் இன்னபிற இலக்கிய விழாக்களிலும் பாடப்பட்டு வருகின்றன என்பது எனது சாதனை எனலாம்.

     மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சி மேடைகளில் பாவலர் வரதராஜன் சகோதரர்களின் கம்பீரமான பாடல்களைக் கேட்டு வளர்ந்த நான், பாரதி, பாரதிதாசன் கவிதைகளால் ஈர்க்கப்பட்டு அப்புறம் கவியரங்க மேடைகளில் அற்புதமாக பாடும் கவிஞர் கே.சி.எஸ் அருணாச்சலம் வழியில் நானும் கவியரங்க மேடைகளில் பாடி வந்துள்ளேன். இன்று எனது பாடல்களை நூற்றுக்கணக்கானோர் தமிழகம் முழுவதும் பாடி வருகின்றனர்.

     பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் மத்தியிலும் உலகை ஈர்த்த ருஷ்ய புரட்சியை- அதாவது சோவியத் யூனியன் சாதனைகளை வியந்து வியந்து பாடிய நான் அதன் வீழ்ச்சிக்கும் இரங்கற்பா பாடியிருக்கிறேன். சோவியத் யூனியன் சிதறுண்டது எல்லாருக்கும் போலவே எனக்கும மன உளைச்சலை ஏற்படுத்தியது. அது சமயம் மதுரைக்கு வந்திருந்த அருமைத் தோழர் ஜெயகாந்தன் என்னைப் பார்த்து, ‘’மதுரை உமக்குப் போதும், என்னோடு சென்னைக்கு வாரும்’’ என்றார்.

     1988 மார்ச் இறுதியில் அவரோடு சென்னைக்கு வந்தேன். அப்போது ‘நவசக்தி’ நாளிதழுக்கு ஆசிரியராக இருந்தார் ஜெயகாந்தன். நான் உதவி ஆசிரியராக இருந்தேன். ஓராண்டு காலம்தான் பத்திரிகை நின்று விட்டது. நான் சென்னைக்கு வந்த பதினான்கு ஆண்டுகள் குடும்பத்தை பராமரிக்கத் தட்டுத் தடுமாறிப் போனேன்.

                       ‘’ பொச்சாப்புக் கொல்லும் புகழை; அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு’’

என்ற வள்ளுவனின் வாக்கைப் போல் அக்கால நீடித்த வறுமை என் அறிவைக் கொன்று விட்டது எனலாம். எரிந்த சாம்பலிலிருந்தே எழும் ஃபீனிக்ஸ் பறவையைப் போல எப்படியோ தப்பிப் பிழைத்தேன்.

     இரண்டு முறை சங்கீதம் கற்கச் சென்றும் எனக்கு அது வாய்க்கவில்லை. இளமை முதலே எனக்காக ஏதொன்றையும் நான் தக்க வைத்துக் கொண்டதில்லை. இன்று வரை ‘மணி பர்ஸ்’ என்ற ஒன்று  என்னிடமில்லை என்றேயானது.

     அப்புறமென்ன, மக்கள் தலையெடுத்தால் மச்சும் தலையெடுக்கும் என்றதோர் பழமொழி உள்ளதே! மகள் டாக்டர் உஷா கிருஷ்ணன் அரசு மருத்துவராகவும், நாவல் இலக்கியவாதியாகவும் வளர்ந்திருக்கிறார். மகன் சரத் சந்திரன் மெட்டி ஒலி திருமுருகன் இயக்கத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறான். பொறியியல் படித்த இளைய மகன் ஜெயகாந்தன் தகுந்த உத்தியோகத்தில் இருக்கிறான். பேரன் பேத்திகள் பார்த்தாகிவிட்டது.

     2001ல் எனது கவிதைகளையெல்லாம் தொகுத்து ஸ்ரீ செண்பகாப்பதிப்பகம் ‘பரிணாமன் கவிதைகள்’ நூலை வெளியிட்டது.

     2011ல் ‘என் பெயர் இந்தியா’ எனும் நூலை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டது. அதற்கு முன்பே வரவேண்டிய ‘உதிப்பதும் இல்லை; மரிப்பதும் இல்லை’ என்ற எனது கவிதை நூலை அதே நிறுவனம் 2013ல் வெளியிட்டிருக்கிறது.

    ‘உச்சி முதல் பாதம் வரை- உறுப்பதிகாரம்’ எனும் கவிதை நூலையும் ‘காதல் முதல் காதல் வரை’ எனும் கவிதை நூலையும் கற்பகம் புத்தகாலயம் வெளியிட உள்ளது.

     சில திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதி வருகிறேன்.

 

     நான் எழுதியது கொஞ்சம்தான். எனக்கு நிறைவாக உள்ளது. படித்தறிந்தால் உங்களுக்கும் நிறைவு தரும்.

சத்திய மேவ ஜெயதே!

                                                               அன்புடன்

                                                              பரிணாமன்.

05.01.2014